புனிதமான ரமலானை வரவேற்போம்..., - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » புனிதமான ரமலானை வரவேற்போம்...,

புனிதமான ரமலானை வரவேற்போம்...,

இன்னும் சில நாட்களில் நம்மிடம் ஒரு சிறப்பு மிக்க, சங்கை மிக்க மாதம் வரவிருக்கின்றது. அது தான் ரமளான் மாதம். இந்த மாதத்தின் சிறப்பிற்கு முக்கியக் காரணம், இந்த மாதத்தில் மனித குலத்தின் நேர்வழியான திருக்குர்ஆன் அருளப்பட்டதால் தான். அல்லாஹ் தன் திருமறையில்...


இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்து காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். ஸுரா அல்பகரா 2:185

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:






வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ரமளானில் நோன்பு நோற்றல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது. அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி) நூல் : புஹாரி 8





இந்த நோன்பை அல்லாஹ் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் கடமையாக்கவில்லை. மாறாக முன் சென்ற சமுதாயங்களுக்கும் கடமையாக்கி உள்ளான்.





நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது. ஸுரா அல்பகரா 2:183,184





இந்த வசனத்தில், நாம் இறையச்சம் உடையவர்கள் ஆக வேண்டும் என்பதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான்.





எத்தனையோ ரமளான் மாதங்களை நாம் அடைந்துள்ளோம். அந்த ரமளான் மாதங்களில் நாம் நோன்பு நோற்றுள்ளோம். ஆனால் அல்லாஹ் எதிர்பார்க்கக் கூடிய அந்த இறையச்சம் நம்மிடம் ஏற்பட்டுள்ளதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளோம். இறையச்சம் என்பது இறை நம்பிக்கையாளனின் உயிர் நாடியாக இருக்க வேண்டும். அவனுடைய ஒவ்வொரு செயலிலும், எல்லா நேரங்களிலும் இந்த இறையச்சம் வெளிப்பட வேண்டும்.





ஒரு இறை நம்பிக்கையாளன் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருக்கும் போது, தீமையான பேச்சுக்களைப் பேசாமல், மோசடி செய்யாமல், தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அந்த மாதம் முழுவதும் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும் என்று எண்ணி, அனைத்துத் தீமைகளை விட்டும் விலகி இருக்கின்றான்.





அந்த ரமளான் மாதம் முடிந்து விட்டாலோ அவன் மீண்டும் தீமையான காரியங்களைச் செய்யத் துவங்கி விடுகின்றான். ஏனெனில் அந்த நோன்பு அவனிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.





இறையச்சம் இந்த ஒரு மாதத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றோ, அம்மாதம் முடிந்து விட்டால் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்றோ இறைவன் கூறவில்லை. இறையச்சம் என்பது ரமளான் மாதத்திற்கும் மற்ற 11 மாதங்களுக்கும் பொதுவானது தான் எனவே எல்லா நாளிலும் ஒருவரிடம் இறையச்சம் பிரதிபலிக்க வேண்டும்.





ரமளான் மாதத்தில் ஒருவன் நோன்பு நோற்றிருக்கும் போது அவனுக்கு அருகில் அவனுடைய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட, அவனுக்குப் பிடித்தமான உணவுகள் இருக்கும். அவனுடைய மனைவி இருப்பாள். தான் விரும்பியதை அவன் செய்யலாம். யாரும் கேட்க மாட்டார்கள். எனினும், நாம் இறைவனுக்காக நோன்பு நோற்றுள்ளோம்; எனவே இது நமக்குத் தடுக்கப்படாத பொருளாக இருந்தாலும் இப்போது நமக்குத் தடுக்கப்பட்டுள்ளது என்று விளங்கி தவிர்ந்து இருக்கின்றான்.





இறைவன் ஹலாலாக்கிய நம்முடைய பொருளாக இருந்தாலும் அதை இறைவன் தடுத்து விட்டான் என்பதால் அவனுக்கு அஞ்சி நாம் தவிர்ந்து இருக்கிறோம். அப்படி என்றால் அடுத்தவருடைய பொருள் நமக்கு ஒரு போதும் ஹலால் ஆகாது. எனவே நாம் யாரையும் ஏமாற்றக் கூடாது; யாருக்கும் மோசடி செய்யக் கூடாது என்ற இறையச்சம் நம்மிடம் வர வேண்டும். இந்த இறையச்சம் வருவதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகின்றான்.





ரமளானின் வணக்கங்கள் மற்ற நாட்களிலும்...





ரமளான் மாதம் வந்து விட்டால் பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள் என அனைவருமே வணக்கசாலிகளாக ஆகி விடுவதைப் பார்க்கிறோம். பள்ளிவாசல்கள் நிரம்பி வழியும். சில நேரங்களில் ஐவேளைத் தொழுகைக்கு வழக்கமாக வருபவர்களுக்குக் கூட இடம் கிடைக்காது. அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதும். ஏனெனில் ரமளானில் செய்யக் கூடிய காரியங்களுக்கு அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்று அனைவரும் விளங்கி வைத்துள்ளனர். எனவே ஐவேளைத் தொழுகையிலும் தவறாது கலந்து கொள்வார்கள். இரவில் நன்மையை எதிர்பார்த்து தூக்கத்தைத் தியாகம் செய்து நின்று வணங்குவார்கள்.





நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்...

யார் நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) நூல் : புஹாரி 37





என்ற நபி (ஸல்) அவர்களின் ஹதீஸின் அடிப்படையில் ரமளான் மாதத்தில் ஐவேளையும், இரவிலும் தொழுகின்றோம்





இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள். ஸுரா அத் தாரியாத் 51:17,18





தொழுகையை நிலை நாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! ஸுரா அல் அன்ஆம் 6:72





ஸலாத்தை பரப்புங்கள். உணவு அளியுங்கள். உறவுகளை ஒட்டி வாழுங்கள். மக்கள் தூங்கும் போது தொழுங்கள். நிம்மதியாக சுவனம் செல்வீர்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) நூல் : அஹ்மத் 24193





ரமளானில் தொழச் சொன்ன அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் தான் ரமளான் அல்லாத காலங்களிலும் தொழ வேண்டும் என்று கூறுகின்றார்கள். எனவே ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும் நாம் தொழுகைகளைப் பேண வேண்டும்.





அது போன்று ரமளான் மாதத்தில் ஒரு முறையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடித்து விட வேண்டும் என்று நாம் போட்டி போடுவோம். ஆனால் ரமளான் முடிந்ததும் இதை ஏறிட்டும் பார்ப்பதில்லை. அது ஏன்? ரமளான் அல்லாத மற்ற நாட்களிலும் குர்ஆனை ஓதினால் ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை உண்டு.





அல்லாஹ்வின் அருள் மறையான அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதபவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம் என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்.' என்றார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரலி) - திர்மிதி 2910

மேலும் ரமளான் மாதத்தில் நம்மால் முடிந்த அளவு ஏதேனும் உணவைத் தயாரித்து ஏழை, எளியவருக்குக் கொடுப்போம். ஆனால் ரமளான் முடிந்து விட்டாலோ நம் அண்டை வீட்டார் உண்ண உணவில்லாமல் பசியோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் கூட அவர்களுக்கு உணவளிக்க நமக்கு மனம் வருவதில்லையே! ஏன்? என்று நமக்கு நாமே கேட்டு, ரமளான் அல்லாத நாட்களிலும் பசித்தவருக்கு உணவளிக்க வேண்டும்.





நாம் எவ்வளவு வீண் வம்பு செய்பவர்களாக இருந்தாலும், ரமளான் வந்து விட்டால், நம்மிடம் யார் வம்புக்கு வந்தாலும் கூட, நான் நோன்பாளி என்று விலகிக் கொள்கிறோம். அதே போன்று ரமளான் முடிந்த பிறகும் செயல்பட நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ள வேண்டும்.





இன்று டி.வி. இல்லாத அறை இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா வீடுகளிலும் டி.வி. உள்ளது. அதிகமான நேரத்தை நாம் அந்த டி.வி.யின் முன்னால் தான் செலவிடுகின்றோம். பள்ளியில் பாங்கு சொல்வது கூட தெரியாமல் சீரியலில் மூழ்கியிருக்கின்றோம்.





ஆனால் ரமளான் மாதத்தில் நம்மில் பலர் சினிமா, சீரியல் பார்ப்பதை விட்டு விடுகின்றோம். ஏனெனில் நோன்பின் போது பொய்யான காரியங்களில் ஈடுபட்டால் எந்தப் பலனும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.





'யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.' அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) நூல் : புஹாரி 1903





ரமளான் மாதம் முடிந்து விட்டால் மீண்டும் சினிமா சீரியல் என்று சென்று விடுகின்றோமே! இது சரியா? நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மட்டும் தான் பொய்யான காரியங்களை விட்டு தடுத்துள்ளார்களா? இல்லையே! எல்லா நாட்களிலும் பொய்யான காரியங்கள் தடுக்கப்பட்டவை தான் என்பதைச் சிந்தித்து மற்ற நாட்களிலும் அவற்றை விட்டு விலகியிருப்போம். இன்னும் எத்தனையோ நன்மையான காரியங்களை ரமளானில் மட்டும் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் செய்வோம். அது போல் அனைத்துத் தீமைகளை விட்டும் ரமளானில் மட்டுமல்லாது வாழ்நாள் முழுவதும் விலகியிருப்போம்.





சென்ற ரமளானில் இருந்தவர்கள் இன்று இல்லை. எனவே வல்ல நாயன் இந்த ரமளான் மாதத்தை அடையும் பாக்கியத்தை நமக்குத் தந்து, அந்த ரமளானில் கடைப்பிடிக்கும் காரியங்களை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கக் கூடியவர்களாக நம்மை ஆக்கி வைப்பானாக!









Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template