திருவாரூர் மாவட்ட
கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி
வாக்காளர் பட்டியலில் பெயர், சேர்த்தல், நீக்கம், திருத்தம் குறித்த பணிகளை
பொதுமக்கள் இணையதள மையங்கள் மூலம் மேற்கொள்ளவதற்காக, மாவட்டத்தில் உள்ள
இணையதள மைய பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம் மாவட்ட கலெக்டர் நடராசன்
தலைமையில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பில் கலெக்டர் நடராசன் பேசும்போது கூறியதாவது:–
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,
நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் இதுவரை மாவட்டத்தில் உள்ள வட்ட
அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தேர்தல் பிரிவின் மூலம் மட்டுமே
மேற்கொள்ளப்பட்டு வந்தது. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி சிறப்பு
முகாம்கள் பள்ளிகளில் அவ்வப்போது நடத்தப்பட்டு புதிதாக பெயர் சேர்த்தல்,
நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரி – 2013
வாக்காளர்பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் திருவாரூர்
மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 4,48,920, பெண் வாக்காளர்கள் 4,42,764, இதர
வாக்காளர்கள் 7 நபர்களையும் சேர்த்து மொத்தம் 8,91,698 வாக்காளர்கள்
உள்ளனர்.
பொதுமக்கள் அனைவரையும் வாக்காளர்
பட்டியிலில் இடம் பெறச் செய்வதன் ஒரு கட்டமாக தேர்தல் ஆணையத்தின்
அறிவுரையின்படி இணையதளத்தின் மூலம் சம்மந்தப்பட்ட வாக்காளரே தேர்தல்
ஆணையத்தின் இணையதளத்திற்கு சென்று பெயர், சேர்த்தல், நீக்கம், திருத்தம்
பணிகளும் மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டு, நடைபெற்று வருகிறது.
மேலும் விண்ணப்பத்தின் தற்போதய நிலை
குறித்து அறிந்து கொள்ளவும் வசதிகள் செய்யப் பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல்
பெயர் சேர்த்தல் பணிகளின் ஒரு கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்
உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள இணைய தள மையங்களில் நேரடியாக சென்று
பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம்
அறிவித்துள்ளது. இங்கு வந்துள்ள இணையதள மைய பிரதிநிதிகள் உங்கள்
மையத்திற்கு வாக்காளர்களிடம் விபரங்களை பெற்றுக்கொண்டு தேர்தல் ஆணையத்தின்
இணையதள முகவரியில் சென்று சம்மந்தப்பட்ட படிவங்களை பதிவிறக்கம் செய்து,
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யவேண்டும்.
இந்த சேவைக்காக வாக்காளர் பட்டியலில்
பெயர் சேர்த்தல் (படிவம் – 6), பெயர் நீக்கல் (படிவம் – 7), பெயர் மற்றும்
இதர திருத்தங்கள் (படிவம் – 8), பெயர் இடமாற்றம் செய்ய (படிவம் – 8ஏ) ஆகிய
பணிகளுக்கு தலா 10 ரூபாய் கட்டணமாக வசூலித்து கொள்ளலாம். வாக்காளர்
பட்டியல் நகல் பெற ஒரு பக்கத்திற்கு 3 ரூபாயும், வாக்காளர் பெயர்,
வாக்குச்சாவடியின் பெயர், விண்ணப்பத்தின் தற்போதய நிலை அறிய 2 ரூபாயும்
கட்டணமாக வசூல் செய்து கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம்
அறிவுறுத்தியுள்ளது. எனவே இங்கு வந்துள்ள இணைய தள மைய பிரதிநிதிகள் உங்கள்
மையத்தில் வாக்காளர்களுக்கு இந்த சேவைகளை செய்து திருவாரூர் மாவட்டத்தில்
உள்ள அனைத்து மக்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற தேர்தல் ஆணையத்திற்கு
உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பயிற்சி வகுப்பில் வருவாய்
கோட்டாட்சியர்கள் திரு.பெ.பரமசிவம், சுப்பு, தனித்துணை ஆட்சியர் (சிறப்பு
திட்ட செயலாக்கம்) தமிழ்ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
எஸ்.மாலா, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் காமராஜ் உள்பட வட்டாட்சியர்கள்,
தேர்தல் துணை வட்டாட் சியர்கள், இணைய தள மைய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்