பாபர் மஸ்ஜித் தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி- 48 மணி நேரத்தில் தீர்ப்பு வெளியாகும் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » , » பாபர் மஸ்ஜித் தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி- 48 மணி நேரத்தில் தீர்ப்பு வெளியாகும்

பாபர் மஸ்ஜித் தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி- 48 மணி நேரத்தில் தீர்ப்பு வெளியாகும்

உச்ச நீதிமன்றம் கடந்த 24ம் தேதி தீர்ப்பளிக்க லக்னெள நீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து தீர்ப்பு வெளியாகவில்லை.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.

இன்றைய முதல் நிகழ்வாக இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் அப்தாப் ஆலம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அயோத்தி நில உரிமை தொடர்பாக மொத்தம் நான்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நான்கிலும் தீர்ப்பு தயாராக உள்ளது. இவற்றை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இப்போது தீர்ப்பை வெளியிடுவது உகந்ததாக இருக்காது என்பது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதியின் வாதமாகும்.

இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கவும், சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி மத்திய அரசு உள்பட அனைத்துத் தரப்பினரும் இன்று உச்சநீதிமன்ற பெஞ்ச்சிடம் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.

மத்திய வக்பு வாரியம், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், அகில இந்திய இந்து மகா சபா ஆகியவை தீர்ப்பை தள்ளி வைக்கக் கூடாது என்று கோரின. அதேபோல சன்னி மத்திய வக்பு வாரியமும் தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்று கோரியது.

தீர்ப்பை வெளியிடுமாறு மத்திய அரசு கோரிக்கை:

இன்றைய விசாரணையின்போது தீர்ப்பைக் கூறலாமா, சிறிது அவகாசம் தரலாமா என்பது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் வாஹனாவதியிடம் உச்ச நீதிமன்றம் ஆலோசனை கேட்டது.

அப்போது 60 ஆண்டு காலமாக நீடிக்கும் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருமாறு அவர் கூறிவிட்டார். மேலும் அவர் கூறுகையில், பிரச்சனையை பேசித் தீர்த்து சுமூக உடன்பாட்டை எட்ட முடியும், அதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றால் அதை மத்திய அரசு மனம் திறந்து வரவேற்கும்.

அதே நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக நிலையற்றதன்மை நிலவுவதை அரசு விரும்பவில்லை. அதே போல நாட்டின் சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் நிலையற்ற தன்மை நிலவுவது சரியல்ல. இதனால் தீர்ப்பை வெளியிட்டு இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதே சரி.

மேலும் அயோத்தி தீர்ப்பை அறிவிக்க வேண்டிய மூன்று நீதிபதிகளில் ஒருவரின் பதவிக்காலம் அக்டோபர் 1ம் தேதி முடிவடைகிறது. அவருக்கு பதவி நீடிப்பு கொடுப்பது என்பது மத்திய அரசின் கையில் இல்லை. அதை முடிவு செய்ய வேண்டியது அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிதான் என்றார் வாஹனாவதி.

இதையடுத்து பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தி்ல தனது தீ்ர்ப்பை வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில், அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது என்று அறிவித்து திரிபாதியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் லக்னெள உயர் நீதிமன்ற கிளை நாளையோ அல்லது நாளை மறுநாளோ தீர்ப்பளிக்கலாம் என்று தெரிகிறது.

தீர்ப்பை அளிக்க காத்திருக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சில் இடம் பெற்றுள்ள ஒரு நீதிபதி அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். எனவே அதற்குள் தீர்ப்பை அளித்தாக வேண்டும். இல்லாவிட்டால் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம்.

எனவே 48 மணி நேரத்திற்குள்ளாக தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது...
Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template